search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரங்கிமலை ரெயில் விபத்து"

    பரங்கிமலை ரெயில் விபத்து தொடர்பாக 25-க்கும் மேற்பட்டவர்களிடம் ரெயில்வே ஊழியர்களிடம் பாதுகாப்பு கமிஷனர் விசாரணை நடத்தினார். #TrainAccident #chennai #StThomasMount
    சென்னை:

    சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற மின்சார ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையத்திற்குள் நுழையும் போது ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த 4 பேர் பக்கவாட்டு சுவரில் மோதி பலியானார்கள்.

    கடந்த 24-ந்தேதி நடந்த இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2 கால்களை இழந்த மற்றொரு வாலிபரும் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.

    சம்பவ இடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் ரெயில் விபத்து குறித்து 30-ந்தேதி விசாரணை நடத்தப்படும் என்றும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் தகவலை தெரிவிக்கலாம் என்றும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் விசாரணை இன்று நடைபெற்றது.

    சென்னை ரெயில்வே அலுவலகம் 5-வது தளத்தில் உள்ள கோட்ட மேலாளர் கருத்தரங்க அறையில் பாதுகாப்பு ஆணையர் கே.ஏ.மனோகரன் தலைமையில் விசாரணை நடந்தது. தலைமை பாதுகாப்பு அதிகாரி மேதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையின் போது இருந்தனர்.

    ரெயில் விபத்தை பார்த்தவர்கள், அந்த ரெயிலில் பயணம் செய்தவர்கள் என 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தகவல்களை கூற வந்திருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து விசாரித்தார்கள்.

    இதுதவிர ரெயில்வே ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. ரெயில் டிரைவர், கார்டு, நிலைய மேலாளர், பொறியாளர் என 25-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்றது.

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவர்தான் விபத்திற்கு காரணம். அதனை அகற்ற வேண்டும் என்று பொது மக்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    நிலையத்திற்கு ரெயில் வந்த வேகத்தின் அளவு என்ன? பக்கவாட்டு சுவருக்கும்-ரெயில் பெட்டிக்கும் உள்ள இடைவெளி என்ன என்பது குறித்தெல்லாம் ஏற்கனவே பாதுகாப்பு ஆணையர் தகவல்களை திரட்டியுள்ளனர்.

    இன்று மாலை வரை நடைபெறும் விசாரணையை தொடர்ந்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? பக்கவாட்டு சுவர் அகற்றப்படுமா என்பது தெரியவரும். #TrainAccident #chennai #StThomasMount

    பரங்கிமலை ரெயில் நிலையத்தில், மின்சார ரெயிலில் சென்ற போது தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் 2 கால்களையும் இழந்த மாணவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். #StThomasMountStation #TrainAccident
    சென்னை:

    சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த 24-ந்தேதி காலை திருமால்பூர் மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கியபடி சென்ற பயணிகள் கான்கிரீட் தடுப்பு சுவரில் மோதியதில் 10 பயணிகள் கீழே விழுந்தனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் சிவக்குமார், பிளஸ்-2 மாணவர் பரத், தனியார் நிறுவன ஊழியர் நவீன்குமார், வேல்முருகன் ஆகிய 4 பேர் பலியானார்கள்.

    கல்லூரி மாணவர் விக்னேஷ், நரேஷ், விஜய், யாசர், மூர்த்தி, ஸ்ரீவர்‌ஷன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். பலியானவர்களின் உடல்களும், காயம் அடைந்தவர்களும் சிதறி கிடந்தனர்.

    இதில் பலியானவர்களில் 2 பேருக்கு தலை துண்டானது. கால்களும் துண்டாகி கிடந்தது.

    காயம் அடைந்த ஸ்ரீவர்ஷனுக்கு இரண்டு கால்கள் விஜய்க்கு வலது காலில் பாதம் துண்டானது. மற்றவர்கள் தலையில் பலத்த காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்களையும், சிதறி கிடந்த கால்கள் மற்றும் உறுப்புகளையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். நரேஷ், விக்னேஷ் ஆகியோர் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத் திரியில் சேர்க்கப்பட்டனர்.


    இரண்டு கால்களையும் இழந்த ஸ்ரீவர்‌ஷன், விஜய், யாசர், மூர்த்தி ஆகியோர் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    ஸ்ரீவர்‌ஷனின் துண்டான கால்கள் பற்றி டாக்டர்கள் கேட்டபோது, அவை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது தெரிய வந்தது.

    அங்கு பலியானவர்களின் உடலோடு தலை, கால்களை பொருத்தி பார்ப்பதற்காக கொண்டு செல்லப்பட்டு இருந்தது.

    இதையடுத்து அவரின் கால்களை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டனர். உடனே ஸ்ரீவர்‌ஷன் அணிந்திருந்த பேண்ட்டை அடையாளமாக வைத்து அவரது கால்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஐஸ் பேக்கில் வைத்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் இரண்டு கால்களும் மிகவும் சிதைந்து இருந்ததால் ஸ்ரீவர்‌ஷனுக்கு பொருத்த முடியவில்லை.

    இதையடுத்து ஸ்ரீவர்‌ஷனுக்கு காலில் ஆபரேசன் செய்யப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். காயம் அடைந்தபோது ரத்தம் அதிகம் வெளியேறியதால் உயிருக்கு போராடி வருகிறார்.

    பிளஸ்-2 முடித்துள்ள மாணவர் ஸ்ரீவர்‌ஷன் தனது நண்பர் விஜய்யுடன் கிண்டியில் உள்ள பள்ளிக்கு சென்ற போது ரெயில் விபத்தில் சிக்கி கால்களை இழந்தது தெரிய வந்தது. #StThomasMountStation #ChennaiAccident #TrainAccident
    பரங்கிமலை ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என மக்களவையில் அ.தி.மு.க. எம்பி வலியுறுத்தினார். #ChennaiTrainAccident #ADMK
    புதுடெல்லி:

    சென்னையில் மின்சார ரெயில் படிக்கட்டில் பயணம் செய்த சிலர், பரங்கிமலை ரெயில் நிலையத்தில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி கீழே விழுந்தனர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்தனர்.

    ரெயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதேபோல் மத்திய அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்து உள்ளது.



    மக்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. ராமச்சந்திரன், பரங்கிமலை விபத்து குறித்து பேசினார். அப்போது, ரெயில் விபத்தில் உயிரிந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 30 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

    பரங்கிமலையில் நடந்த விபத்து ரெயில் பயணிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணித்ததால் உயிரிழக்க நேரிட்டதாக குற்றம்சாட்டப்பட்டாலும், தண்டவாளத்தை ஒட்டி உள்ள தடுப்புச் சுவர்தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த சுவரை அகற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். #ChennaiTrainAccident #ADMK
    ×